கோயம்புத்தூர்:ஆன்லைன் வர்த்தகம் மூலம் 20 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர், அத்திபாளையம் பகுதியில் 'டெய்லி மேக்ஸ்' என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். அவர், தனது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 100 நாள்கள் கழித்து, இரண்டு லட்சமாக வழங்கப்படும் என்றும், குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு 2.40 லட்சம் தருவதாகக்கூறியும் விளம்பரம் செய்திருந்தார்.
இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்திருந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சூலூரை அடுத்த காங்கயம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரில் அத்திபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டெய்லி மேக்ஸ் சொல்யூஷன் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக்கூறி தன்னிடம் ரூ.7.40 லட்சம் மோசடி செய்ததாக, அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர், நிதி நிறுவன உரிமையாளர் செந்தில்குமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில், மேட்டூர் அருகே தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 1,500க்கும் மேற்பட்டோரிடம் 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.