தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனம்! - வெள்ளியங்கிரி மலைக்கு சிறப்பு பேருந்து

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 5, 2023, 5:04 PM IST

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி சிவன் கோயிலில் ஏராளமானோர் சாமி தரிசனம்!

கோவை: சித்ரா பௌர்ணமி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி மலை சிவன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் பக்தர்களில் பலரும் ஏழுமலை ஏறி, சிவனை வழிபட்டு வருகின்றனர்.

இவர்களுடன் சிவனடியார்களும் மலையேறி சிவனை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் இன்றைய தினம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிகாலையில் இருந்து பக்தர்கள் மலை ஏறி சென்று, சிவ பாடல்கள் பாடியும் சிவ நாமங்களை முழக்கமிட்டபடியும் சிவனை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று வருகை புரிவதால் வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பக்தர்கள் மலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்காலிக கழிவறை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் தனியார் அமைப்புகள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் சார்பில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கோவை மாநகரில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதே சமயம், கோவில் அடிவாரத்திலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு குறிப்பிட்ட இடம்தேர்வு செய்யப்பட்டு அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வெள்ளியங்கிரி மலை ஏறிய கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஏக மூர்த்தி என்பவர், மூச்சுத் திணறல் காரணமாக இரண்டாவது மலையில் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.50 லட்சம் செலவு.. 3 ஆண்டில் சேதமடைந்த தரைப்பாலம்.. கோவை மக்கள் குமுறல்!

ABOUT THE AUTHOR

...view details