கோயம்புத்தூர்:காந்திபுரம் பகுதியில் இன்று (பிப்.27) காலை அரசு குளிர்சாதன சொகுசு பேருந்து ஒன்று சக்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதேநேரம் அரசு பேருந்தின் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு பேருந்துகளும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பின் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தனியார் ஆம்னி பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியது.
இதில் அரசு பேருந்து, அருகிலிருந்த ஒரு கடை கட்டடத்தில் இடித்து நின்றது. இதனால் அந்த கடையின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவை சேதமடைந்தது. அதேநேரம் இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் 2 ஓட்டுநர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டது. மேலும் அந்த கடைக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த நபர், பேருந்துகள் மோதிய சத்தம் கேட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.