தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2020, 4:50 PM IST

ETV Bharat / state

ஸ்டாலினுடன் வீடியோ கால்... 400 பேருக்கு உணவு... கரோனா காலத்திலும் அசத்தும் இட்லி பாட்டி!

கரோனா வைரஸ் காரணமாக உணவுப்பொருள்களின் விலை ஏறினாலும், தினமும் 400 பேருக்கு இட்லி பாட்டி கமலாத்தாள் உணவளித்து வருவது அனைத்து மக்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Old Women Gave idly for 1 Rs in Corona Emergency situation, appreciated by DMK Leader
Old Women Gave idly for 1 Rs in Corona Emergency situation, appreciated by DMK Leader

ஒரு ரூபாய் இட்லி என்றால் நம் கண்முன்னே வந்து செல்பவர் கமலாத்தாள் பாட்டி. இட்லி பாட்டி என்றாலே தமிழ்நாடு மட்டுமல்ல தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எவ்வளவு புகழ் வந்தாலும் யதார்த்தமாக நம்மை பார்த்து கையசைத்து ஒரு குழந்தையை போல துள்ளி குதித்து வந்த பாட்டியை நம்மாலும் மறக்க முடியாது.

கரோனா எதிரொலி காரணமாக நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.

தற்போது கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களுக்கே திண்டாடி வருகின்றனர். ஆனால் இப்போதும், புன்னகை மாறாமல் எப்படியாவது சமாளித்து ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்து வருகிறார்.

தன்னை தேடி பலபேர் வந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களை கொடுத்து வருவதாகவும், மற்றவர்கள் செய்யும் உதவியை தான் மறக்க மாட்டேன் என்று பணிவோடு கூறுகிறார்.

85 வயதானாலும் சுறுசுறுப்புக்கு உதாரணம் இட்லி பாட்டிதான் என்னுமளவுக்கு நமக்கும் உற்சாகத்தை கொடுக்கும், மனிதநேயமுள்ள அவரது அன்பு, அவரிடம் வருகிற அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கரோனா காலத்திலும் அசத்தும் இட்லி பாட்டி

இந்நிலையில் நேற்று மாலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கமலாத்தாள் பாட்டியிடம் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தார். தற்போது உள்ள சூழலிலும் 1 ருபாய்க்கு இட்லி விற்பனை செய்வதற்கு பாராட்டு தெரிவித்த அவர், தேவையான உதவிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன், பாட்டிக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளை வழங்கினார்.

இதனையடுத்து நம்மிடம் பிரசாத் உத்தமன் பேசும்போது, ''இட்லி பாட்டியைப் பற்றி அதிகமாகக் கேள்விப்பட்டுளேன். 85 வயதிலும் அன்னதானம் செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா எதிரொலியால் மளிகை பொருள்களின் விலையேற்றத்திலும் அதனை சமாளித்து 400 பேருக்கு உணவளித்து வருவது பாராட்டத்தக்கது. அவருக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் அரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கியிருக்கிறோம். அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கமலாத்தாள் பாட்டிக்கு குவியும் ஆதரவு!

ABOUT THE AUTHOR

...view details