கோயம்புத்தூர்: சாய்பாபா காலனி அருகே கே.கே.புதூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் 60 வயதான முதியவர் தலையில் காயத்துடன் இன்று (ஆகஸ்ட் 10) பிணமாக கிடந்தார். இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சடலமாக கிடந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் (58) என்பது தெரியவந்தது. அவர் தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
அத்துடன் அவரின் தலையின் பின்புறம் காயம் இருந்தது. இதனால் அவரை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில், அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் முஸ்தாக்கை சரமாரியாக தாக்கி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 2 குழந்தைகள் மாயம் - நடந்தது என்ன?
இதில் அவருடைய தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் (24), மணிகண்ட மூர்த்தி (26), மனோஜ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''கே.கே.புதூர் பகுதியில் 24 வயது இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது வீட்டின் மேல் பகுதியில் ஏறிய முஸ்தாக், ஓடுகளை பிரித்து, அந்தப் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே ராகுல், மணிகண்டமூர்த்தி, மனோஜ் ஆகியோர் சேர்ந்து முஸ்தாக்கை சரமாரியாக அடித்துக் கொலை செய்து உள்ளனர். எனவே 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்து உள்ளோம்'' எனத் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி - பின்னணி என்ன?