கோயம்புத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர் வனப்பகுதி மற்றும் மருதமலை வனப்பகுதியில், தற்போது 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். யானைகளின் வலசைக் காலம் இது என்பதால், அதன் அருகில் உள்ள கேரள வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் நாள்தோறும் வந்து செல்கின்றன.
இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிச.25) இரவு தொண்டாமுத்தூர், விராலியூர், கெம்பனூர் மற்றும் மருதமலை ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களில் புகுந்த நிலையில், இவற்றை போளுவாம்பட்டி மற்றும் கோவை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனைத் தொடர்ந்து, நரசிபுரம் பகுதியில் வனத்தை விட்டு வெளியே வந்த யானைகளை, போளுவாம்பட்டி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், விராலியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே, அப்பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி என்ற முதியவர் காலைக்கடன் கழிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை, அவரை தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிந்துள்ளார். இதனை அடுத்து, அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “தற்போது கோவை வனக்கோட்டத்தில் ஏராளமான யானைகள் நடமாட்டம் உள்ளதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் அவசியம் இன்றி காட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டாம். அதேபோல், யானைகள் ஊருக்குள் வந்தால் அதனை விரட்ட முயற்சி செய்ய வேண்டாம். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் வந்து யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவார்கள்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!