கோயம்புத்தூர்: சூலூர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் இந்த இயக்கத்தை வலுவானதாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றினார். மற்ற மாநிலங்கள் பார்த்து வியக்கும் ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார்.
ஆட்சி போயிருக்கும்: அவர் மறைவிற்குப் பின்னர் அவர்கள் கட்டி காப்பாற்றிய சட்டவிதிகள், அதிமுக தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்ற விதிகளைத் தூக்கிப் போட்டு விட்டனர். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால், மன்றாடி கேட்டுக் கொண்டதால் கழகத்தை அப்போது மீண்டும் இணைத்தோம். நிரந்தர பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச நிலையை ஏற்படுத்தினோம்.
கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்த என்னை வன்முறையாக வெளியேற்றி விட்டனர். சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள். 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும்.
வழக்கு இன்னும் நிலுவையில்:நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்ற போது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்ததால் எடப்பாடிக்கு ஆட்சி போனது, அடுத்தடுத்த தேர்தல்களிலும் தோற்றுப் போனது. ஈரோடு இடைத்தேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுக்கள் பிரியும். வாபஸ் வாங்கிடுங்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாபஸ் வாங்கிக் கொண்டேன்.
ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஈரோட்டில் தோற்றுப் போனது. இந்த தேர்தல்களில் தோற்றுப் போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்று தானே அர்த்தம். எடப்பாடி பழனிசாமி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராக வர இருந்ததைத் தடுத்தவர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது. தொண்டர்களுக்காக வாதாடிக் கொண்டு இருக்கின்றோம். இந்த பக்கம் தொண்டர்கள் இங்கு இருக்கின்றனர்.
திகார் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்:அங்குக் குண்டர்கள்தான் இருக்கின்றனர். தொண்டர்களுக்குக் கொடுத்துள்ள உரிமையைத் தந்தால் தான் தலைவர்களுக்கு நன்றி செலுத்துவது போன்றது. தனிக்கட்சி துவங்கும் நோக்கமில்லை. கோரப்பிடியிலிருந்து அதிமுகவைக் கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும். அதிமுக துவங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவேன். தனிக்கட்சியை எப்போதும் துவங்க மாட்டேன் என்பது நிலைப்பாடாக இருக்கின்றது.
தனிக்கட்சி ஆரம்பித்தால் உச்ச நீதிமன்ற வழக்கில் இடையூறு ஏற்படும். முதலமைச்சர் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்து விட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காகப் பாடுபட்டு வருகின்றேன்.
ஆட்சியிலிருந்த போது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவுத்து விட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத் தான் செல்ல வேண்டும்.அமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதை 100 சதவீதம் செய்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்” என்று கூறினார்.
அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கின்றேன்:பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “ஜனவரி 19 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வருகின்றது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பான முடிவு கிடைக்கும். ஈரோட்டில் இரட்டை இலை தற்காலிகமாகத் தான் கொடுக்கப்பட்டது. என் மீது என்ன குற்றம் சொல்கின்றனர்?, என்னை நீக்குவதற்கு என்ன காரணம் சொல்கின்றனர்?, யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதைச் சொல்ல முடியுமா?, இப்பொழுதும் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கின்றேன்.