கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான சிறுவாணியில் உருவாகும் காஞ்சிமாநதி என்றழைக்கபடும் நொய்யல் ஆறு 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக வளமோடு காணப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், 70-க்கும் மேற்பட்ட குளங்கள், 120-க்கும் மேற்பட்ட குட்டைகள் உள்ளன. அத்தகைய பல்வேறு சிறப்பை கொண்ட நொய்யல் நதி கழிவுநீரால் மாசுபட்டு காணப்படுகிறது. அதற்காக பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் நொய்யலின் புனிதத்தை போற்றும் வகையில் நொய்யல் பெருவிழா நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பேரூர் மருதாசல அடிகளார் நேற்று (டிசம்பர் 30) செய்தியாளர்களிடம் கூறுகையில், "அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நொய்யல் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நொய்யல் பெருவிழா நடத்தப்படுகிறது. நொய்யல் பெருவிழா ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அகில இந்திய சந்நியாசிகள் சங்கம் பல்வேறு நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது நதிகளை பாதுகாப்பது. அதன்படி காவிரி உற்பத்தியாகக்கூடிய குடகு பகுதியில் இருந்து கடலில் கலக்கும் காவிரிபூம்பட்டினம் வரை காவிரி அன்னை சிலை எடுத்து செல்லப்பட்டு ஆராத்தி விழா நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மற்ற நதிகளுக்கும் புஷ்கரணி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வைகை, தென்பெண்ணை, பாலாறு ஆகிய நதிகளுக்கும் புஷ்கரணி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நொய்யல் ஆற்றுக்கும் பெருவிழா எடுக்கப்படுகிறது. இந்த நொய்யல் பெருவிழாவில் நொய்யல் ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியுடன் கலக்கும் வரை உள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நொய்யல் அன்னை சிலை பல இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு ஆராத்தி விழா நடத்தப்படும். இந்த நொய்யல் பெருவிழாவை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாரத்தான், விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடத்தப்படவுள்ளது.