தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லை’ - பட்டியலின மக்கள் ஆவேசம் - அருந்ததியர்

பொள்ளாச்சி நல்லூத்துக்குளியில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லை என பட்டியலின மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

’இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லை’ - அருந்ததியர் மக்கள் ஆவேசம்
’இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லை’ - அருந்ததியர் மக்கள் ஆவேசம்

By

Published : Jun 8, 2022, 11:05 PM IST

கோவை:பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துக்குளி கிராமம் அருந்ததியர் காலனியில் நூற்றுக்கு மேற்பட்ட அருந்ததியர் எனும் பட்டியலின சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆற்றங்கரையோரம் 6-க்கு 4 என்ற அளவில் மட்டுமே மயான வசதி உள்ளது.

இந்நிலையில், ஒரு மாதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டால் இந்த மயானத்தில் 6*4 என்ற அளவில் மட்டுமே கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது.

’இறந்தவர்களின் உடல்களை புதைக்க சுடுகாடு இல்லை’ - பட்டியலின மக்கள் ஆவேசம்

குறிப்பாக ஒரு புதைத்த உடலை தூக்கி வெளியே வைத்துவிட்டு தான் மற்றொரு உடலைப் புதைக்க முடியும். 40 ஆண்டுகளாக இந்நிலையை இப்பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து மயான வசதி ஏற்படுத்தி தரக் கோரி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் அவர்களிடமும் மற்றும் நல்லூத்துக்குளி ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி மன்றம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் இன்றளவும் எடுக்கவில்லை. நல்லூத்துக்குளி கிராமம் அருந்ததியர் காலனியில் நாகராஜன் (44) என்பவர் கடந்த செவ்வாயன்று(ஜூன் 7) இரவு உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று(ஜூன் 8) இறந்தவரின் உடலைப் புதைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த 6-க்கு 4 என்ற அளவிலான மயானம் ஆற்றங்கரையோரம் உள்ளதால் இறந்தவர்களின் உடல் அவ்வளவு எளிதாக மக்குவதில்லை. மேலும், ஒன்றரை அடி அளவில் குழி தோண்டினால் ஆற்று நீர் வெளியே வந்துவிடுகிறது.இதனால் பெரும் துயரத்திற்கு இப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயான வசதி கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெறும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நல்லூத்துக்குளி கிளைச் செயலாளர் எஸ்.அழகர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க "ஆபரேஷன் கந்துவட்டி" - டிஜிபி அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details