கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்து பில்லூர் அணை அமைந்துள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி, கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது.
பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காரணமாக கனமழை பெய்துவருகிறது. திங்கள் கிழமை பில்லூர் அணைக்கு விநாடிக்கு 2,200 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 86 அடியிலிருந்து 91 அடியாக உயர்ந்தது.
அணையில் மின் உற்பத்திக்காக ஒரு எந்திரத்தை இயக்கியதில் அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கனஅடி நீர் வெளியேறியது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று (அக். 12) காலை அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.