சென்னை: தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Breaking News: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை! - என்ஐஏ சோதனை
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்களிடம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, மயிலாடுதுறை வடகரை சின்னமேலத்தெருவை சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர். தந்தை, மகன் இருவரும் மஸ்கட் நாட்டில் பணியாற்றி வரும் நிலையில் அங்கு சோதனை நடத்தப்படுகிறது. அதேபோல், கோவை கோட்டை மேடு பகுதி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.