கோயம்புத்தூர்: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக தமிழ்நாடு, கேரளா என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய 60 இடங்களில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த வகையில் கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் மாநகர போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.