தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; 5 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை நடத்த 10 நாட்கள் போலீஸ் காவல்கேட்டு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கோவை கார் குண்டு வெடிப்பு ; 5 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு
கோவை கார் குண்டு வெடிப்பு ; 5 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

By

Published : Dec 14, 2022, 5:34 PM IST

கோயம்புத்தூர்:கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் என ஆறு பேரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தவும், அதன் மூலம் மதப் பிரச்னைக்கு வழி வகுக்கவும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும், ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த நபர்களின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக முகமது தவ்பிக், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான் உள்ளிட்ட மேலும் மூவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் வெடிகுண்டு தயாரிப்பதற்கான கையெழுத்து குறிப்புகள், பயங்கரவாதம் தொடர்புடைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் போன்ற ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 நபர்களில் 5 பேரை மட்டும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ இன்று(டிச.14) மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை(டிச.15) நீதிமன்றத்தில் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிலிண்டர் வெடிப்பு வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? வேறு இடத்தில் ஏதும் குண்டுவைக்க திட்டமிட்டுள்ளனரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்ஸை சந்திப்பேன் - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details