கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக அக்டோபர் 23ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளைப் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 43 இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்தது.