கோயம்புத்தூர்: உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் சிதறி கிடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை பறிமுதல் செய்திருந்தனர். இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் 14-வது நபராக போத்தனூர் திருமலை நகரை சேர்ந்த தாஹா நசீர் (27) என்பவரை நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கார் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.