கோயம்புத்தூர்: கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அன்று, அதிகாலை சமயத்தில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்து சிதறியது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் சிதறிக் கிடந்தது கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவரது வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள் மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றினர். பின்னர் வழக்கு, தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டது.
மேலும் என்ஐஏ அதிகாரிகளின் உதவிக்காக, ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். பின்னர், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்களை அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தவகையில், தற்போது வரை 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.