Coimbatore car blast case: கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் ஏற்கனவே ஆறு பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (ஜூன் 2) மேலும் கூடுதலாக, 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பொது நிர்வாகத்தின் மீது போர் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் குற்றவாளிகள் எவ்வாறு தீவிரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தனர் மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் உள்ளிட்டவை விசாரணையில் அம்பலமானது. கோயம்புத்தூரில் அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பு நடந்தது. விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத கொள்கை உடைய ஜமிஷா முபின் என்ற தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக என் ஐ ஏ கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விசாரணையை கையில் எடுத்து வழக்கில் தொடர்புடைய 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஐந்து பேர் மீது குற்ற பத்திரிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் ஜமீசா முபின் மற்றும் முகமது அசாருதீன் உமர் பாரூக், இதயத்துல்லா மற்றும் சனோஃபர் அலி ஆகியோரிடம் சேர்ந்து கோயம்புத்தூரில் தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் என்பது கபீர்ஸ் எனப்படும் தங்கள் கொள்கை மீது நம்பிக்கை இல்லாத நபர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் எனவும், தாக்குதலுக்கு முன்பாக வீடியோவையும் தீவிரவாதிகள் வெளியிட்டு இருந்தனர்.