கோயம்புத்தூர்:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவோடு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகரம் உக்கடம் பகுதியில் அமைந்து உள்ள வாலங்குளம் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு 12 மணியளவில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கண்களைக் கவரும் வண்ண வண்ண லேசர் விளக்குகளால் ஒளிரூட்டபட்டது. புத்தாண்டு பிறந்தவுடன் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக 250 டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு களித்தனர்.