கோயம்புத்தூர்:புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பெருங்கருணை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் அருகில் உள்ள இ.கே.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் மது அருந்தி உயிரிழந்து உள்ளனர்.
இதனை உயிரிழந்தவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் முறையிட்டார்கள். மீனவர்கள் வசிக்கின்ற அந்த கிராமத்தைச் சார்ந்தவர்கள் மது விற்பனை செய்யக்கூடாது என்று இருந்தாலும், அரசியல் பின்புலத்தோடு காவல்துறை துணையோடு அந்த பகுதி மக்களுக்கு வேறு கிராமத்தாரால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அங்குள்ள பல்வேறு இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
டாஸ்மார்க் மற்றும் அதற்கு இணையாக விற்பனை செய்யப்படும் மது குறித்து பல தகவல் வெளிய வர துவங்கியுள்ளது. சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இரவு 10 மணிக்கு பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. செந்தில் பாலாஜி நான் சொல்லக்கூடிய புள்ளிவிவரம் தவறு என்றார். ஆனால் நான் கூறிய பல லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இகேஆர் குப்பம் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
22 பேர் உயிரிழந்த நிலையிலும் கூட தற்போது வரை எந்த அமைச்சரும் அந்த கிராமத்தை வந்து சந்திக்கவில்லை. துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பார்க்கவில்லை. 22 பேர் மரணத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் ஆனால் அவர் விலகவில்லை. விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ரத்தமும் வியர்வையும் சுரண்டப்படுகின்ற சூழல் இருந்தும் கூட இந்த அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏற்புடையது அல்ல.
உச்ச நீதிமன்றம் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது பல பணியிடங்களுக்கு பணம் பெற்றார் எனத் தெரிவித்தும் கூட செந்தில் பாலாஜி பதவி விலகவில்லை. மேலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் மே 27 ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செந்தில் பாலாஜியை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறும். 2000 ரூபாய் நோட்டுகளை உலகத்திலிருந்து நீக்குவது குறித்தான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தெரிவித்த அவர் 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது 10 % மட்டும்தான் புழக்கத்தில் உள்ளது அதையும் நீக்குவதற்கு ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது என்றார்.