தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி! விவசாயத்தில் புதிய அத்தியாயம் துவக்கம்!

கோயம்புத்தூரில் இருக்கும் நீங்கள் பொள்ளாச்சியில் இருக்கும் உங்கள் தோட்டத்திற்கு யாரையும் எதிர்பார்க்காமல் தண்ணீர் பாய்ச்ச முடியுமா? செல்போன் தொழில்நுட்பத்தில் இது கூட சாத்தியம்தான். ஆனால், களை எடுப்பது, உழவு போடுவது என அனைத்துமே தானியங்கி தொழில்நுட்பம் மூலம் நடைபெறும் என்றால் நம்ப முடிகிறதா? அதுகுறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு...

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 19, 2023, 11:00 PM IST

வேளாண் தொழிலுக்கான நவீன தொழில்நுட்ப கண்காட்சி

கோயம்புத்தூர்: எங்கோ வெளிநாட்டில் கேள்விப்பட்ட தொழில் நுட்பங்கள் எல்லாம், நமது தோட்டங்களுக்கும் வயல்களுக்கும் வந்துவிட்டது. இதனை உணர்த்தும் விதத்தில் தான் இருந்தது கோவையில் நடைபெற்ற வேளாண் தொழிலுக்கான நவீன தொழில்நுட்ப கண்காட்சியான அக்ரி இண்டெக்ஸ்.

கோவை கொடீசியா அரங்கத்தில் நுழைந்த போது, அனைத்து விவசாயிகளும் ஆர்வமாக பார்வையிட்ட மாயா க்ரீன்ஸ் அரங்கத்தைப் பார்வையிட்டோம். உழவு போடுவது முதல் களையெடுப்பது வரையிலும் தானாகவே பணிகளை மேற்கொள்ளும் ரோபோ விவசாயி குறித்து விளக்கினார், இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருள் குமாரசாமி.

அப்போது அவர் கூறியதவது, "தங்களுடைய நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த ரோபோவை அறிமுகம் செய்துள்ளதாகவும், விரைவில் சந்தைக்கு வர உள்ள இந்த ரோபோவிற்கு வரும் காலங்களில் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்" கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ரோபோ களை எடுப்பதைத் தவிர உழவு செய்யவும், மருந்து தெளிக்கவும், நிலத்தை சமன் செய்யவும் பயன்படும், இதன் சிறப்பு அம்சம் இதனை இயக்கவோ, கண்காணிக்கவோ ஆட்கள் தேவை இல்லை. என்ன வேலை செய்ய வேண்டும்... எந்த இடங்களில் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டால் மட்டும் போதும்; ஒரு வாரத்திற்கான பணிகளை செய்து முடித்து விடும்.

பேட்டரி மூலம் மட்டுமே இயங்குவதால் செலவு குறைவு. பேட்டரி அளவு குறையும் போது தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கருவி பொருத்தப்பட்டுள்ளதால் செல்லும் வழியில் தடை இருந்தால் அதில் இருந்து விலகி செல்லும்.

இந்த ரோபோவின் செயல்பாடுகள் அனைத்தையும் செல்பொன் மூலமாகவே கண்காணிக்க முடியும். இதில் x1,x2 என இரண்டு வகைகள் உள்ளன. இடத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தலாம், அரசின் அனுமதிக்கு இவை அனுப்பப்பட்டுள்ளதால் அனுமதி கிடத்தவுடன் அதிகளவில் உருவாக்கப்பட உள்ளது. ஆட்கள் செய்யக்கூடிய 80 சதவீத பணிகளை இந்த ரோபோ செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.

கண்காட்சியில் இருந்த நவீன கருவிகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெண் விவசாயியான இந்திராணி கூறும்போது, "பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இந்த ரோபோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் களை எடுக்கும் போதோ, உழவு பணியின் போதோ நிலத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் அந்தப் பணியை செய்ய முடியாது.

இது போன்ற சூழலில் ரோபோ கிடைக்கும்போது களை எடுக்கும் பணி மற்றும் உழவுப் பணியை எளிதில் செய்ய முடியும். டிராக்டருக்கு டீசல் செலவு, ஓட்டுநர் கூலி மிச்சமாகிறது. கூலி ஆட்களுக்கு வாரம் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலும் அதற்கான வருமானம் கிடைப்பதில்லை. ஆனால், இதற்கு ஒரு முறை மட்டுமே பணம் செலவு செய்தால் பல வருடங்களுக்கு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த ரோபோ, விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என தெறிவித்தார்.

உழுவது, விதைப்பது மட்டுமல்ல பழங்களை பறித்து அறுவடை செய்யவும் நாங்கள் தயார் என்கின்றன, ரோபோக்கள். பழங்களைப் பறிக்கும் போதே விற்பனைக்கு ஏதுவாக அடுக்கிவிடுவதிலும் இந்த ரோபோக்கள் கெட்டிக்கார இயந்திரமாக உள்ளன. அதனைப் பற்றி ப்ளோ டெக் பாலி ப்ராடக்ட் நிறுவனத்தின் இயக்குநர் திவ்யா கார்த்திக் கூறுகையில், "விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் காய்கறிகள், பழங்கள் பறிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனைப் போக்கும் வகையில் தங்களுடைய நிறுவனம் புதிய ரோபோவை உருவாக்கி உள்ளதாகவும் இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தொகுப்பில் நீங்கள் பார்த்தது ஒன்றிரண்டு உதாரணம் மட்டுமே, அக்ரி இண்டெக்ஸ் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு நவீன கருவிகள் இடம்பெற்றிருந்தன. ஆள் பற்றாக்குறை என்பது தமிழகம் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை. இதற்கு சாதகமான தீர்வை இது போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வழங்கும் என உறுதியாக நம்பலாம்.

இதையும் படிங்க:ஆயுள் கூட வேண்டுமா இதை மட்டும் சாப்பிடுங்க: மருத்துவர்கள் கூறும் மந்திரக்கனி..!

ABOUT THE AUTHOR

...view details