தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்டை வீட்டாரை காலி செய்ய சிறுநீர் வீசிய மேயர் கல்பனா குடும்பத்தினர்.. வீடியோ வெளியிட்டு பெண் குமுறல்.. கோவையில் நடந்தது என்ன? - Coimbatore mayor

Coimbatore corporation mayor: கோவை திமுக மேயர் கல்பனாவின் குடும்பத்தினர், அருகில் வசிப்பவரை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க வீட்டின் மாடியில் இருந்து சிறுநீரை ஊற்றுவது, பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை வீசிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 12:26 PM IST

Updated : Aug 28, 2023, 5:16 PM IST

கோவை மேயர் குடும்பத்தினருக்கு எதிராக பெண் புகார்

கோயம்புத்தூர்:தஞ்சாவூரைச் சேர்ந்த சரண்யா தனது கணவர் கோபிநாத் மற்றும் குழந்தைகளுடன் கோவை மணியகாரன்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வெவ்வேறு பகுதியில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் தாயார் காளியம்மாள், தம்பி குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது அரசு குடியிருப்பில் தங்காமல், தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

4 வீடுகள் உள்ள கட்டடத்தில் தங்கியிருக்கும் மேயர் கல்பனா, சரண்யாவை அவரது வீட்டிலிருந்து காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல தொந்தரவுகளை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதே பகுதியில் 2 வீடுகளில் மேயரின் உறவினர்களும் தங்கியுள்ளனர்.

சமையலறை மீது சிறுநீர், நாப்கின் என நீளும் கொடூரம்?:இது குறித்து சரண்யா கூறுகையில், கல்பனா மேயர் ஆவதற்கு முன்பு நன்றாக பழகினார். ரூ.15,000 பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தங்களிடம் மோசமான அணுகுமுறையில் ஈடுபட்டு வருதாகவும், தங்கியுள்ள கட்டடத்தில் இருக்கும் பொதுவான கேட்டை பூட்டுப்போட்டு வைத்துக்கொண்டு, காரைக் கூட வெளியில் எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கெட்டுப்போன உணவு வகைகள், கோழி இறைச்சி போன்றவற்றை கொண்டு வந்து சரண்யா வீட்டின் சமையலறையின் அருகில் கொட்டுவதை வாடிக்கையாக செய்வதாகவும், கொடுமையின் உச்ச கட்டமாக வாளியில் சிறுநீரை பிடித்து மேயரின் தம்பி தங்களது சமையலறையில் சுவற்றின் மீது ஊற்றுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை தங்களின் வீட்டு பகுதியில் வீசி அசுத்தப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்பனா மேயரானவுடன் தினமும் குப்பை எடுக்க இந்த பகுதிக்கு வாகனங்கள் வருவதாகவும், தூய்மைப்பணியாளர்கள் அவரது இல்லத்திலேயே வேலை செய்வதாகவும் இரண்டு ஆண்டுகளாகவே இவர்களின் டார்ச்சர் அதிகமாக இருப்பதாகவும், சமீபகாலமாக மேயர் கல்பனா இந்த வீட்டில் தங்க ஆரம்பித்தவுடன் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தகாத வார்த்தைகளால் பேசிவருதாக குற்றச்சாட்டு: இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு புகார்கள் அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிறுநீர் மற்றும் கெட்டுப்போன உணவு பண்டங்களில் இருந்து வெளியேறும் தூர்நாற்றத்தால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என யாராலும் இருக்க முடியவில்லை என மனம் வருந்தினார், சரண்யா. தொடர்ந்து தங்களை திட்டமிட்டு டார்ச்சர் செய்வதுடன், மேயர் கல்பனாவின் தம்பி குமார் தகாத வார்த்தைகளிலும் தங்களை இழிவாக பேசி வருவதாகவும், இதன் காரணமாகவே சிசிடிவி கேமராவை பொருத்தி அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மந்திரித்த பூசணிக்காய் மற்றும் பூசை பொருட்கள்:தஞ்சாவூரில் இருந்து பிழைக்க வந்தவர்கள் என்று இழிவாக பேசுவதுடன், வாசல் கூட்டும் துடைப்பத்தை வீட்டின் முன்பு தூக்கி எறிவது போன்ற செயல்களிலும், மந்திரிக்கப்பட்ட பூசணிக்காய் மற்றும் பூசை பொருட்களை வாசலில் போட்டு வைப்பதாகவும் மேயர் கல்பனா குடும்பத்தினரின் செயலால் கடந்த சில மாதங்களாக தூக்கமே இல்லாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வருந்தியுள்ளார்.

திமுக தலைமைக்கு கோரிக்கை:தஞ்சாவூரில் பாரம்பரிய திமுகவினராகிய தங்களுக்கு திமுகவை சேர்ந்தவர்களாலேயே இதுபோன்ற துன்பம் ஏற்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றார். ஆகவே, திமுக தலைமை கழகத்தையே நம்பியுள்ள தங்களுக்கு, திமுக தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து மேயர் கல்பனாவை தொடர்பு கொண்ட போது, அவரது எண்ணில் பேசிய அவரது கணவர் ஆனந்த், தான் வெளியில் இருப்பதாகவும், மாநகராட்சியின் அதிகார்வப்பூர்வ எண்ணில் மேயரை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினார். மாநகராட்சி மேயருக்கான எண்ணில் அவரை தொடர்பு கொண்டபோது, முதலில் மேயர் மீட்டிங்கில் இருப்பதாக தெரிவித்த உதவியாளர், அடுத்து அழைத்த பொழுது அழைப்பை எடுக்கவில்லை.

அரசு குடியிருப்பில் பேய் நடமாட்டமா?:குற்றச்சாட்டு குறித்து மேயரின் தயார் காளியம்மாளிடம் கேட்டபோது, தன்னை இதுகுறித்து ஏதும் பேச வேண்டாம் என மேயர் கல்பனா கூறியுள்ளதாக சொல்லிவிட்டு வேகமாக கதவை சாத்திவிட்டு சென்றுவிட்டார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேயரின் அரசு குடியிருப்பில் பேய் நடமாட்டம் உள்ளதாக கூறி, பல்வேறு பூஜைகளை செய்த மேயர் கல்பனா அங்கு குடும்பத்துடன் வசிக்க முடியாது என்ற நிலையில் அவரது தாயார் வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தக்க நடவடிக்கை தேவை:இந்த நிலையில், திமுக மேயரான கல்பனா மீது இந்த குற்றச்சாட்டுகளை வைத்துள்ள சரண்யா என்ற பெண், தாங்கள் இவ்வளவு தொல்லை தந்தும் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை என்றும் ஏனெனில், தாங்கள் திமுக தலைமையை நம்பியுள்ளோம் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், உரிய விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த சட்ட போராட்டம் - ஓபிஸின் அரசியல் பயணம் முடிந்ததா?

Last Updated : Aug 28, 2023, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details