கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் சுபஸ்ரீ (19) நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், தேர்வு பயத்தால் தற்கொலையால் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் 700க்கு 451 மதிப்பெண் பெற்ற அவருக்கு பல் மருத்துவத்தில் இடம் கிடைத்துள்ளது.
ஆனால் பொதுமருத்துவத்தில் மாணவிக்கு ஆர்வம் இருந்ததால், கோவையில் உள்ள தனியார் அகாதமியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் தான், தேர்வு பயம் காரணமாக மாணவி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதனிடையே, கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நீட் தேர்வினால் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு இந்த நிகழ்வினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நீட் தேர்வினால் மாணவி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்து பழைய நடைமுறையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.