மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை உள்ளதால், வருகின்ற செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் அதற்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் சுபஸ்ரீ (19) நீட் தேர்விற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் அகாதமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வு குறித்த பயத்தில் தற்கொலையால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவராக வரவேண்டும் என்று கனவு கொண்டிருந்த மாணவி, தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் ஆறுதல் தெரிவித்துள்ளார்.