நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த எள்ளநல்லி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு மருத்துவத் துறை சார்ந்த ஊசிகள், பல்வேறு தேவைக்கான ஊசிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிறுவனத்தில் சேதமடையும் ஊசிகள், நெகிழிக் கழிவுகளை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் ஒப்பந்த முறையில், மறுசுழற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஊசி தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து சுமார் 2000 கிலோ எடையுள்ள ஊசிகள், நெகிழிக் கழிவுகள் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ப்ளாஸ்டிக் கழுவுகளைக் கொட்டிய லாரியை பறிமுதல் செய்த வனத்துறை பின்னர் அங்கு நெகிழிக் கழிவுகள் கொஞ்சம் இறக்கப்பட்ட பின்னர் கோத்தகிரி சாலையில் முதலாவது கொண்டை ஊசி வளைவில் மீதமுள்ள ஊசி, நெகிழிக் கழிவுகளை லாரி ஓட்டுநர் லூயீஸ் என்பவர் கொட்டியுள்ளார். இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக சிறுமுகை வனச்சரகர் மனோகரனுக்கு தகவல் அளித்தனர்.
அதையடுத்து அங்குவந்த வனத் துறையினர் வனப்பகுதிக்குள் கொட்டப்பட்ட அனைத்து கழிவுகளையும் மீண்டும் லாரியில் ஏற்றினர். பின்னர் விசாரணைக்காக சிறுமுகை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்ட கழிவுகளில் நல்ல பொருள்களை மட்டும் ஒப்பந்ததாரர் எடுத்துக்கொண்டு மீதம் உள்ள ஊசி, நெகிழிக் கழிவுகளை கோத்தகிரி சாலையில் கொட்டிவிடுமாறு கூறியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வனத் துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. நாளை காலை வனத் துறை உயர் அலுவலர்கள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஏற்கனவே வனவிலங்குகள் நோய்கள், பல்வேறு காரணங்களால் உயிரிழந்துவரும் சூழலில் ஊசி, நெகிழிக் கழிவுகள் வனப்பகுதியில் கொட்டிவருவது வனத்தில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே லாரி ஓட்டுநர், அதனை எடுத்துவர உதவிய அனைவர் மீதும் வனத் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கால்பந்து விளையாடும் ஜம்போக்கள்!