கோயம்புத்தூர்:உக்கடம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக 20க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு கோவையில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த உக்கடம் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் GM நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, உக்கடம், ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமமூன் அன்சாரி வீட்டில் சோதனையை நடத்தினர். இதற்கு அப்பகுதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.