தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2022, 10:24 PM IST

ETV Bharat / state

சூலூரில் இருபிரிவினரிடையே மோதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

சூலூர் அடுத்த பொன்னாங்காணி கிராமத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

கோயம்புத்தூர்:சூலூர் போகம்பட்டி அருகில் உள்ள பொன்னாங்காணி கிராமத்தில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ராமு என்பவர் மோதினார். இதன் காரணமாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நோட்டீஸ் வழங்கியது‌. அதனடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹல்டர், பொன்னாங்காணி கிராமத்திற்கு இன்று (மார்ச்.12) நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது உயிரிழந்த ராமுவின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவை, அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சூலூரில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் விசாரணை

காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஹல்டர், "மத்திய அரசும் தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இந்த சம்பவம் பழிவாங்கும் சம்பவமாக மாறிவிடாமல் இருக்க இருதரப்பினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை கூட்டங்களை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரின் வாகனத்தை உடனே திருப்பித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபரின் மனைவியின் வேலைவாய்ப்புக்கு மாவட்ட வருவாய்த்துறை ஏற்பாடு செய்து தரவேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், துணைத் தலைவர் முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்க தயார் - எஸ்.வி.சேகர்

ABOUT THE AUTHOR

...view details