கோவை:கோயம்புத்தூரில் கடந்த 7 வருடங்களாக பதவியில் இருந்த வெவ்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயர்கள் ஒரே முகவரியில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தவர் அர்ச்சனா பட்நாயக், இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியராக ஹரிஹரன், ராசாமணி ஆகியோர் பணிபுரிந்தனர். தற்போது மாவட்ட ஆட்சியராக சமீரன் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த நான்கு மாவட்ட ஆட்சியரின் பெயர்களும், அவர்களது குடும்பத்தினர் பெயரும் ஒரே முகவரியில் இருப்பது தெரியவந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒரே எண்ணில் இந்த மாவட்ட ஆட்சியர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களாக இருந்த அரச்சனா பட்நாயக், ஹரிகரன், ராசாமணி ஆகியோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயர்களை பழைய முகவரியில் இருந்து அதிகாரிகள் நீக்கம் செய்யாமல் உள்ளனர். அதேவேளையில் தற்போதைய மாவட்ட ஆட்சியரின் பெயரும் இந்த முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளது.