கோவையில் இளைஞருக்கு வெற்றிகரமாக நடைபெற்ற இருதய மாற்று அறுவை சிகிச்சை கோயம்புத்தூர்: கேரள மாநிலம் வயநாடு பகுதியை சார்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான ரகுமான்(38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல் நலக் குறைவு ஏற்பட்டு கோவை பந்தைய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரகுமானின் இதயத்தில் உள்ள வால்வுகளின் இயக்கம் குறைவாகவும், ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இருதயம் செயலிழந்து இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.
உயிருக்கு போராடிய ரகுமானுக்கு இருதய மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா(51) என்ற பெண், விபத்தில் சிக்கி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து விடியல் செயலி மூலம் மஞ்சுளாவின் இருதயம் தானமாக அளிக்கப்பட இருப்பதை அறிந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்கான உபகரணங்களை எடுத்துக் கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அங்கு அரசு மருத்துவர்களின் உதவியோடு மஞ்சுளாவின் இருதயம் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவத்துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆகியோர் உதவியுடன் 50 நிமிடத்தில் மின்னல் வேக பயணத்தில் பெருந்துறையில் இருந்து கோவை கேஜி மருத்துவமனைக்கு வந்தடைந்தது. பின்னர் ரகுமானுக்கு மஞ்சுளாவிடமிருந்து பெறப்பட்ட இருதயம் பொருத்தப்பட்டது. மயக்கவியல் துறை மருத்துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.
இதுகுறித்து இருதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கூறுகையில், "தமிழ்நாடு அரசாங்கம் அறிமுகம் செய்த விடியல் செயலியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஒரே மருத்துவமனையில் இருந்து இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதே கடினம் என்ற நிலையில், வெகுதூர பயணத்தை காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்டோர் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசாங்கம் இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் கட்டமைப்பை வைத்திருக்கிறது. இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கின்றது" எனத் தெரிவித்தார். ரகுமானுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களுக்கு ரகுமானின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்து கொண்டனர். மேலும் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்களுக்கும், இதனை வெற்றிகரமாக செய்து முடிக்க விரைந்து உதவிய காவல் துறை, ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க:கிராமம் ஒன்று..! எம்.எல்.ஏ மட்டும் ரெண்டு..! அரசியல் ஆச்சரியம் நிறைந்த அஞ்சோரா கிராமம்!