கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்டது நாகுரூத்துபதி. ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் வரும் இந்தப் பகுதியில் மகா மலசர் இனத்தைச் சேர்ந்த 46 குடும்பங்கள் உள்ளன.
70 டிகிரி சாய்வில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம் பற்றியே மக்களுக்குத் தெரியாது. இங்குள்ள குழந்தைகள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று வேட்டைகாரன் புதூர் அருகே உள்ள மண்ணம் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுவருகின்றனர்.
புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் வசிக்கும் பகுதியில், சர்வ சாதாரணமாக சிரித்த முகத்துடன் வரும் குழந்தைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். இவர்கள் காண்டூர் கால்வாயை கடந்துதான் மலை ஏற வேண்டும். 15 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள இரும்பு பாலத்தை கடந்து, இருசக்கர வாகனத்தை செடிகளிகளுக்கிடையே மறைத்து வைத்துவிட்டு, தங்களது ஊருக்கு செல்கிறார்கள்.
கரடு முரடாக இருக்கும் மலையில் ஏறத் தொடங்கும்போதே கால்கள் வலிக்க ஆரம்பித்துவிடும். அதை கண்டுகொள்ளாமல் மூச்சு வாங்க வாங்க ஒரு வித பயத்தோடு ஏறி 30 நிமிட நடைப் பயணம் மேற்கொண்டால் நாகுரூத்துபதியை அடையமுடியும்.
46 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கொன்றும், இங்கொன்றுமாக குடிசைகளை அமைத்து இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனர். மழை பெய்தால் வீட்டில் படுத்து உறங்கமுடியாத சூழலே இங்கு நிலவுகிறது. மழை காரணமாக மண் சரிவு அதிகளவில் ஏற்பட்டாலும், தங்கள் சிரமத்தை மறந்து வாழும் இம்மக்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடே கடத்துகின்றனர்.
குப்பைக் கிடங்காக மாறும் நெல்மடூர் கிராமம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?
வாழ்வில் பல நாள்களை நடந்தே கடத்தும் இம்மக்கள் உடல் பருமன் என்றால் என்ன என கேள்வி எழுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் இவர்கள் அவ்வளவு மெலிந்த தேகத்துடன் காணப்படுகின்றனர். இருப்பினும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
சோலார் விளக்குகள் பழுதடைந்ததால், மாலை வேலைகளில் படிக்க சிரமப்பட்டாலும், வீட்டைவிட்டு வெளியே வர இம்மக்கள் அச்சப்படுவதே இல்லை. இருட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதார்த்தமாக அவர்களது இலக்கை அடைய நகர்ந்துசெல்கின்றனர்.
இவர்கள் தங்களது வீட்டருகே சிறிய அளவில் விவசாயம் செய்தும், ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்னை, கடலை தோட்டங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு 350 ரூபாய் வரை இவர்களுக்கு கூலி கொடுக்கப்படுகிறது.