கோயம்புத்தூர்: ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “2024 தேர்தலுக்கான முன் தயாரிப்பு தான் இந்த கூட்டம். மூன்றாவது கட்டமாக இந்த பயணம் நடைபெறுகிறது. அடுத்த கட்டமாக இன்னும் இரண்டு பயணங்கள் உள்ளது. தஞ்சை சோழமண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் பயணம் உள்ளது. இந்த பயணத்தை எல்லாம் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க இருக்கிறோம். எங்கள் கட்சிக்கென்று ஒரு கொள்கை மற்றும் வரலாற்றுப் படிப்பினை உள்ளது.
மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் திராவிட ஆற்றல்களுடன் சமரசம் செய்து விட்டார்கள்:நான் முன் வைக்கின்ற அரசியல் புதிது கிடையாது. எங்கள் முன்னோர்கள் முன்னெடுத்தது தான். இதற்கு முன்பு இருந்து வந்த தமிழ் தேசிய ஆற்றல்கள் எல்லாமே எந்த கோட்பாட்டை எதிர்த்து வந்தார்களோ, அந்த கோட்பாட்டைத் திருத்தி சரண் அடைய வேண்டிய சூழல் அமைந்துவிட்டது. அதற்காக அவர்களைக் குறை சொல்லவில்லை. அதனைத் தொடர்ந்து வந்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் ஆகிய ஆற்றல்கள் எல்லாம் திராவிட ஆற்றல்களுடன் இன்று சண்டை செய்ய முடியாமல் சமரசம் செய்து விட்டார்கள்.
இது ஒரு படிப்பினையாக உள்ளது. வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் தனித்து நிற்கும் பொழுது அவர்களுடைய வாக்கு என்ன?, கூட்டு சேர்ந்து நிற்கும் போது அவர்களுடைய வாக்கு என்ன? எனவே மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கட்சியின் மாற்றத்தை எதிர்பார்க்கும் பொழுது அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் பொழுது மக்களின் மாற்றம் ஏமாற்றம் ஆகிவிடுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேச வேண்டிய தேவை இல்லை: அதனை நான் செய்வதற்குத் தயாராக இல்லை. எனவே நான் தனித்து தான் நிற்பேன். இந்திய கட்சிகள், திராவிட கட்சிகளுடன் எந்த ஒரு உடன்பாடும் இல்லை” என்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அவர் வர வேண்டும். பின்னர் அவரது கொள்கையை முன் வைக்க வேண்டும். அந்தக் கொள்கையில் எனக்கு உடன்பாடு இருக்க வேண்டும். எனது கொள்கையில் அவருக்கு உடன்பாடு இருக்க வேண்டும். பிறகு தான் அதைப் பற்றி பேச வேண்டும். தற்பொழுது அதைப் பற்றி பேச வேண்டிய தேவையும் இல்லை” என பதில் அளித்தார்.
எதற்காக மொழிவாரியாக இத்தனை மாநிலங்கள் பிரிந்தது?:சீமான் போட்டியிடும் இடத்தில் முப்பது சதவீதம் அதிகமான வாக்குகளை பாஜக வாங்கும் என பாஜக அண்ணாமலை தெரிவித்தது குறித்தான கேள்விக்கு, “அந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். ஆனால் அதில் ஒன்று கவனிக்க வேண்டும். நான் 7 விழுக்காடு வாக்குகளை வைத்துள்ளேன். அவர் 30 விழுக்காடு எனக் கூறுகிறார், அப்படி என்றால் மொத்தம் 37 விழுக்காடு. 37 விழுக்காட்டை அவர் தொட்டு விடுவார் என்றால் அவர்களுக்கு அதிமுகவுடன் கூட்டணியே தேவையில்லை.
வெறுப்பு அரசியலை செய்பவன் அல்ல:அவர் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைத்து விடலாமே. அவர் அவரது ஆதரவாளர்களையும் தொண்டர்களையும், ஊக்கப்படுத்துவதற்காகப் பேசுகிறார். நான் முன்வைக்கின்ற மொழி, இன, அரசியல் வெறுப்பு என்றால் எதற்காக மொழிவாரியாக இத்தனை மாநிலங்கள் பிரிந்தது?. அனைத்து நாடுகளிலும் மொழிவாரியான தேசிய இனங்கள் தான் உள்ளன. அப்படி என்றால் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் எதிர்ப்பதை மட்டுமே பேசுவது வெறுப்பு அரசியல் இல்லையா?.
நான் வெறுப்பு அரசியலை செய்பவன் அல்ல. நான் எனது தேசிய இன உரிமைக்காக நிற்பவன். இந்தியாவில் இனிமேல் தான் காங்கிரஸ் வென்று வரப் போகிறதா அல்லது பாஜக ஆளப்போகிறதா. இத்தனை ஆண்டு காலம் காங்கிரசும் பாஜகவும் ஆட்சி செய்ததில் என்ன மாற்றம் வந்துள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்?. நிலவுக்கு சந்திரயானையும், சூரியனுக்கு ஆதித்யாவையும் விடுவேன் என்பதற்குப் பதிலாக முதலில் ஒழுங்காகப் பேருந்து விடுங்கள், அதை விட்டுவிட்டு காமெடி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நிலவில் குடியேறப்போவது இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டியனா?:பேய்க்கும், பேய்க்கும் சண்டை என்பது போல் ரயிலுக்கும் ரயிலுக்கும் சண்டை வருகிறது. இதெல்லாம் உச்சபட்ச நகைச்சுவை. வயிறு காய்ந்து கிடக்கும் பொழுது வான்வெளியில் ஆய்வு என்பது என்னவாக கருதுவது?. 130 கோடியில் 80 கோடி ஏழைகள் என நாங்கள் சொல்லவில்லை நீங்கள் (மத்திய அரசு) தான் கூறினீர்கள். விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வது எந்த நேரத்திலும் தேவை இல்லை. இந்தியாவை விட வல்லா திக்க நாடு, பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடு, இந்தியாவிற்கு கடன் கொடுக்கின்ற நாடே சும்மா இருக்கிறார்கள்.