உலக மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெறுக்கும் ஓர் வார்த்தையாக மாறி நிற்கிறது, கரோனா. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கொடிய வைரசால் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பவில்லை.
மனிதர்கள் மூலம் மட்டுமே சக மனிதர்களுக்குக் கரோனா பரவும் என்ற நிலை மாறி, தற்போது காற்றிலும் கரோனா பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது, பொதுமக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனாவின் வேட்டை ஆரம்பமானது. இதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக தொடர்ந்துகொண்டே வருவதால்... வேலையிழப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் உண்டாகிய மன அழுத்தம் எனப் பல்வேறு பிரச்னைகளுக்குள் மக்கள் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் கதிகலங்கச் செய்துவரும் கரோனாவிற்கு, யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா என மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். உலக நாடுகள் அனைத்தும் இதற்கான பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும், இதுநாள் வரை கரோனாவிற்கான முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மருத்துவ ஆராய்ச்சியாளர்களே இதற்கான முயற்சிகளில் தொடர் தோல்வியுற்று, தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இத்தகைய சூழலில், ”எங்க மூலிகை மைசூர்பா சாப்பிட்டா கரோனா ஒரே நாளில் ஓடிப்போய்விடும்” என்ற அறிவிப்பை வெளியிட்டு கோவையைச் சேர்ந்த ஸ்வீட் கடைக்காரர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் தொட்டிபாளையம் பகுதியில் ’நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் இனிப்பு, பலகாரங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திவருகிறார். இவர் ’கரோனா ஒரே நாளில் குணமாக எங்கள் கடை மைசூர்பா சாப்பிடுங்கள்’ என்று நோட்டீஸ் அச்சடித்து ஊர் முழுக்க கொடுத்து அமர்க்களப்படுத்தி இருந்தார்.