கோயம்புத்தூர்:தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனாரி பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில், கடந்த 15ஆம் தேதி வாயில் காயத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆண் காட்டு யானை சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
அப்போது யானை திடீரென வனப்பகுதிக்குள் மாயமானது. இதனையடுத்து மாயமான காட்டு யானையை தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் வனப்பகுதியான செங்குட்டை என்ற இடத்தில் கடந்த 17 ஆம் தேதி யானை கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் மாயமானது.
கோவை ஆனைகட்டியில் மாயமான யானை 12 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு.. இதனையடுத்து கோவை செங்குட்டை, ஊக்கயனூர், பனப்பள்ளி மற்றும் சீங்குழி பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு (ஆகஸ்ட் 28) பனப்பள்ளி பழங்குடியின கிராமம் அருகே யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறையினர், அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை என்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் ஆனைகட்டிக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க:8 வயது யானையை தேடும் பணியில் 11 வனத்துறை குழுக்கள்