தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி விழா: விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்! உற்சாக வரவேற்பு! - திமுக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல்

Vinayagar Chathurthi 2023: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு, இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்
விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 4:37 PM IST

விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள்

கோயம்புத்தூர்:இந்து - இஸ்லாமியர்கள் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப். 18) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபலமான மாட்டுச் சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் தலைமையில் இஸ்லாமியர்கள் பலர் ஒன்று சேர்ந்து பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலை ஆகியவற்றை சீர்வரிசையாக கொண்டு வந்து விநாயகருக்கு செலுத்தினர்.

திராவிட முன்னேற்ற கழகம் சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகராட்சி துணைத் தலைவர் கௌதமன், நகராட்சி கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, செந்தில், மணிமாலா, கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோர் சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இது குறித்து சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் கூறுகையில், "தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். பொள்ளாச்சியில் நடைபெறும் மாரியம்மன் பண்டிகை உள்ளிட்ட இந்துக்களின் நிகழ்ச்சிகளில் நாங்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்கிறோம். அதேபோல் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இந்து சகோதரர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கின்றனர்.

மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று(செப்.17) கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநாயகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்களை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் பகுதியில், இஸ்லாமியர்கள் விநாயகருக்கு சீர் வரிசையாக பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை கொண்டு வந்தது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள் - கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி !

ABOUT THE AUTHOR

...view details