கோயம்புத்தூர்: இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஏனெனில் இங்குதான் யானைகள், புலிகள், காட்டு மாடுகள், சிறுத்தைகள் என பல்வேறு அரிய வகை விலங்குகள் உள்ளன. ஆனால், இந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், சிறியூர் வனப்பகுதி, நடுவட்டம், கார்குடி, எமரால்ட், சின்ன குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 புலிகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.
மாட்டில் விஷம் வைத்ததில் அதை சாப்பிட்டு இரண்டு புலிகள் உயிரிழப்பு, புலிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு உயிர் இழப்பு என பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்பு நேரிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு குன்னூர் பகுதியில் காட்டு மாடு ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவர் குழுவினர் உயிரிழந்த காட்டு மாட்டின் உடலை பரிசோதனை செய்ததில், மாட்டின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் உஷாரான வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், காட்டு மாடு உயிரிழந்த அன்று கேரள பதிவெண் கொண்ட ஜீப் ஒன்று அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜீப்பின் பதிவு எண்ணை வைத்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கூடலூர் பகுதியைச் சேர்ந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் சம்பவம் நடந்த அன்று குன்னூர் பகுதிக்கு வந்ததும், காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது அவர்களை கைது செய்ய வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்துள்ளனர். மேலும், அவர்களை பிடிக்க காவல்துறையின் உதவியையும் கோரி உள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில், வேட்டை கும்பல் ஊடுருவி இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் நீலகிரி மாவட்ட வன பாதுகாவலருமான வெங்கடேஷ் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் வேட்டை கும்பல் ஊடுருவல் ஏதும் இல்லை.