தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கிறது மழைக் காலம்: மழைநீரை சேமிக்க என்ன செய்யப் போகிறோம்?

இயற்கையில் இருந்து விலையில்லாமல் கிடைக்கிறது என்பதற்காக நீர் பற்றிய புரிதலும், அக்கறையும் இல்லாமல் இருக்கிறோம். மக்களின் இந்த அலட்சியம், இளைய தலைமுறையை மிகவும் பேராபத்துக்குள் தள்ளி விடப்போகிறது என்று அச்சம் தெரிவிக்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

மழைநீரை சேமிக்க என்ன செய்யப் போகிறோம்?
மழைநீரை சேமிக்க என்ன செய்யப் போகிறோம்?

By

Published : Jun 30, 2021, 10:34 PM IST

Updated : Jul 1, 2021, 9:31 AM IST

நதிக்கரைகளிலிருந்து மேட்டுநிலம் நோக்கி நகர்ந்து குடியிருப்புகளை அமைக்கத் தொடங்கிய மனிதனின் முதல் தேவையாய் இருந்தது நீர். அதற்காக, நீரின் ஓட்டப்பாதையை கண்டுணர்ந்த மனிதன் உருவாக்கிய உத்தியே, மழைநீரை தேக்கிச் சேமித்து, தன் தேவைக்குப் பயன்படுத்தியது.

ஆதிமனிதனின் இந்த உத்தியை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது தமிழர்களின் நீர்மேலாண்மை. நீரின் அவசியம் உணர்ந்து, குட்டை, குளம், ஏரி என பல்வேறு நிலைகளில் நீரைத் தேக்கி சேமித்து பயன்படுத்தி வந்தனர்.

நீரின்றியமையாது உலகு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழை நீரின் அவசியத்தை உணர்ந்த பொய்யாப் புலவர் திருவள்ளுவர்,

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு என எடுத்துரைத்திருக்கிறார்.

நீர்சுழற்சியின் பாலபாடத்தை உணரத் தவறிய நாம், நீர் வழிப்பாதைகளை அடைத்து, மழைநீரை கழிவுநீராக கடல் சேர்த்து வருகிறோம். தற்போது அதன் விளைவுகளை மெல்ல அறுவடை செய்தும் வருகிறோம்.

பொய்த்து வரும் பருவமழை, நீர்நிலைகளின் வறட்சியால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 முதல் 100 அடியில் கிடைத்து கொண்டிருந்த நிலத்தடி நீர் தற்போது பாதாளத்திற்கு சென்று விட்டது.

நெருங்குகிறது மழைக் காலம்: மழைநீரை சேமிக்க என்ன செய்யப் போகிறோம்?

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதைப் போல தமிழ்நாடு முழுவதும் இதுவே நிலை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து, அடிப்படை தேவைக்கும், விவசாயத்திற்கும் நீரில்லாத சூழல் உருவாகும் என எச்சரிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

நீர்நிலைகளை மீட்டெடுக்கும் அமைப்புகள்

தடாகம் மலை அடிவாரப்பகுதியில் வெட்டப்பட்ட குழிகளால் ஓடைகளில் நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது

கோவை மாவட்டத்தின் இந்த நிலையை சீர்செய்ய, நிலத்தடிநீரை மீட்டெடுக்கும் முயற்சியில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. அவிநாசி அத்திக்கடவு, கௌசிகா நதி மேம்பாட்டு குழு தலைவர் செல்வராஜ் அந்த முயற்சி குறித்து நம்மிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். " தடுப்பணைகள் அமைப்பது, குளங்களை தூர்வாருவது, நீர்வரத்துப் பாதைகளை இணைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்தில் தண்ணீர் இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் மேம்படும்.

நீர் ஒரே இடத்தில் பரவலாக நின்றால், ஆவியாகி வீணாக போய் விடும். குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான செயல்பாட்டில் பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

கௌசிகா நதியில் நீர் இல்லாததால் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர்மட்டம் 1500 அடிக்கு கீழ் தண்ணீர் சென்று விட்டது அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் மூலம் 30 தடுப்பணைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதனை இன்னும் அதிகரிக்க செய்ய வேண்டும்" என்றார்.

தடாகம் மலை அடிவாரப் பகுதியில் செம்மண் எடுக்கப்பட்ட குழிகள்

மேலும் தொடர்ந்த அவர், "பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வறட்சியில் இருந்து பல கிராமங்களை மீட்டெடுக்க முடியும்.

மழைநீர் சேகரிப்பு

மழைக்காலங்களில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணி குளங்களுக்கு வரக்கூடிய நீர் வழி பாதைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி நீர் வழிப்பாதையை சரிசெய்ய வேண்டும்.

இந்த ஆண்டு சீராக மழை பெய்தால், அந்த நீர் தேக்கி வைக்கும் அளவிற்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். சேமிப்பை அதிகப் படுத்தினால் மட்டுமே வறட்சியை தவிர்க்க முடியும்.

பொதுநல அமைப்புகளின் அந்த பெரும் முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும். தனித்தனி வீடுகளில் மோட்டார் மூலம், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வரும் நிலையில், வீடுகளிலும் தோட்டங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்தை சீராக வைத்திருக்க முடியும்.

தமிழ்நாடு அரசு முறையாக ஆய்வு நடத்தி, நீர் வழி பாதைகளை மீட்டால் மட்டுமே வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும். இல்லையெனில் வருங்கால சந்ததியினர் தண்ணீரை எழுதி வைத்து தான் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:என்னவானது மழைநீர் சேமிப்புத் திட்டம்?

Last Updated : Jul 1, 2021, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details