கோயம்புத்தூர்:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் அதே மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணும் கோவையில் பலூன் விற்று வருகிறார். மேலும், கோவையில் இவர்களுக்கு வீடு இல்லாததால், சாலை ஓரங்களிலோ அல்லது கடை வாசல்களிலோ இரவு நேரங்களில் படுத்து தூங்குவதை இருவரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு வடகோவை மேம்பாலம் அருகே உள்ள தனியார் கடை வாசலில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அங்கு கையில் மது பாட்டில் உடன் வந்த நபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த ரேகாவிடம் இருந்து 120 ரூபாயை திருடிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, ரேகா விழித்துக் கொண்டு சத்தமிட முயன்றுள்ளார்.
இதனை உணர்ந்த அடையாளம் தெரியாத நபர், கையில் வைத்திருந்த மது பாட்டிலால் ரேகாவின் கழுத்தில் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி உள்ளார். அப்போது ரேகா கூச்சலிட, உடன் படுத்திருந்தவர்கள் விழித்துக் கொண்டனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றவரை பிடித்த சனோஜ், அவரை கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.