கோயம்புத்தூர்:அமெரிக்காவில் உள்ள ஈவிகோ (EVGO) நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி, போலியாக செயலி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழில் சார்ந்த ஆன்லைன் செயலியின் நிறுவனர் வீசிஸ் தேசாய் எனவும், அவருக்குக் கீழே ராக் ஸ்டா என்ற நபர் இருப்பதாகக் குறிப்பிட்டு மூன்று கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தி உள்ளனர்.
முதல் திட்டத்தில் 680 ரூபாய் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு, 37 ரூபாய் வீதம் 35 நாட்களுக்கு, ஆயிரத்து 295 ரூபாய் கிடைக்கும் எனவும், இரண்டாவது திட்டத்தில் 6 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், தினமும் 480 ரூபாய் வீதம், 52 நாட்களுக்கு 24 ஆயிரத்து 960 ரூபாய் கிடைக்கும் எனவும், மூன்றாவது திட்டத்தில் 58 ஆயிரம் முதலீடு செய்தால், தினமும் 5 ஆயிரத்து 200 ரூபாய் வீதம் 20 நாட்களுக்கு 1 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என விளம்பரப்படுத்தி உள்ளனர்.
இதனை நம்பிய மக்கள் மேற்கண்ட திட்டங்களில் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கான தொகையை ஈவிகோ நிறுவனம் சில நாட்களுக்குக் கொடுத்து வந்துள்ளது. இதனை நம்பிய கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்கள் அனைவரையும் வாட்ஸ் ஆஃப் செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகோ செயலி செயல்படவில்லை.