கோயம்புத்தூர்மாவட்டம், உக்கடம் பகுதியில் தெற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மநீம மாநில இளைஞரணிச் செயலாளர் சிநேகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், வானதி சீனிவாசனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிநேகன், ''கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளார். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மநீம சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடக்கம் தான், தொடர்ந்து அவர்கள் களப்பணியைத் தொடங்கவில்லை என்றால், அடுத்தகட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதேபோல தமிழ்நாடு முழுவதும் தேர்தல் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டறிந்து அங்கெல்லாம் விழிப்புணர்வு பேரணி, போராட்டங்கள் நடத்துவோம்.
கமல்ஹாசன் போட்டியிட்ட தொகுதி என்பதால் மட்டும் இங்கு போராட்டம் தொடங்கவில்லை, தேர்தல் நேரத்தில் உற்று கவனிக்கப்பட்ட ஒரு தொகுதி என்பதால் தொடங்கப்பட்டுள்ளோம். கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவாரா? கூட்டணி உள்ளதா? என்பது குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் உள்ளது. கூடிய விரைவில் அறிவிக்கிறோம். யாராக இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அது தான் ஜனநாயகம். இது குறித்து கேள்வி கேட்கும் அரசியல் கட்சியாக மநீம தற்போது போராட்டங்களை தொடங்கியுள்ளது'' என்றார்.