தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்துக்கள் என்ன பாவம் செய்தார்கள்..! தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வீர்களா முதலமைச்சரே? - வானதி சீனிவாசன் கேள்வி - திமுக

BJP vanathi srinivasan: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இந்துக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த தீபாவளி பண்டிகைக்காவது வாழ்த்து சொல்வீர்களா முதல்வரே? என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

BJP vanathi srinivasan press release
வானதி சீனிவாசன் அறிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 12:34 PM IST

கோயம்புத்தூர்:தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பாரா எனக் கேள்வி எழுப்பிகோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நாளை (12.11.2023) பாரதம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். புத்தாடை, இனிப்பு, விதவிதமான உணவு வகைகள், பட்டாசு எனக் கொண்டாட்டமான பண்டிகை இது. தீபாவளி என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தைகள் உற்சாகமாகி விடுவார்கள்.

பண்டிகைகளின் நாடான நம் பாரதத்தில் வெகு உற்சாகமான கொண்டாட்டங்களில் தீபாவளிக்கென்று தனியிடம் உண்டு. தீபாவளியை மையப்படுத்திய வணிகம் என்பது பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும். எவ்வளவு தான் அதர்மம், அநீதிகள் தலைதூக்கினாலும் இறுதியில் தர்மமே, அதாவது அறமே வெல்லும் என்பதுதான் தீபாவளியின் அடிப்படை தத்துவம்.

பாரதத்தின் மற்ற மாநிலங்களை விடவும் நம் தமிழ்நாட்டில் தீபாவளி வெகு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி சார்ந்த பட்டாசு, ஜவுளி உள்ளிட்ட வணிகமே தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளிக்கு ஒரு வார்த்தை கூட வாழ்த்து சொல்வதில்லை. ஆனால், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்குத் தவறாமல் பக்கம் பக்கமாக வாழ்த்து சொல்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின், அவர் தலைவராக உள்ள திமுகவும் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என் மனைவி கிறிஸ்தவர் எனப் பெருமையாகச் சொன்ன, முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை டெங்கு, மலேரியா, கொசு போல ஒழிப்பேன் எனப் பேசுகிறார்.

திமுக தலைவராக ஸ்டாலினிடம் தீபாவளி வாழ்த்துகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், முதலமைச்சர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் அனைவருக்கும் பொதுவானவர். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டியது முதலமைச்சரின் கடமை. ஆனால், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை.

அப்படி ஒரு வார்த்தை கூட வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு இந்துக்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்பது தெரியவில்லை. இந்துக்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்? எனவே, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தீபாவளிக்காவது வாழ்த்துச் சொல்வீர்களா? அல்லது வழக்கம் போல செலக்டிவ் மதச்சார்பின்மை அதாவது இந்து எதிர்ப்பைதான் தொடரப் போகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 5 பேர் பலி.. 40க்கு மேற்பட்டோர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details