கோயமபுத்தூர்:கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகிழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது, "கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் நிதி உதவி, கர்ப்பிணிகளுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சரிடம் பேசி உள்ளோம். மாநில அரசு தகவல்களை தரவேற்றம் செய்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மாநில சுகாதார அமைச்சர் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரசவிக்கும்போது, முன்பைவிட தற்போது மரணங்கள் குறைவாக உள்ளது. நல்ல அலுவலக சூழல் இல்லாத நிலையிலும், அங்கன்வாடி ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும்போது இன்னும் பெண்களுக்கான உரிமைகள் அதிகரிக்கும்.
தேசிய ஐனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்களது தலைவர்கள் பேசி வருகின்றனர். மோடி பிரதமராக வேண்டும் என்பதில் மற்ற கட்சிகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணிக்குள் அதிகமான கட்சிகளைக் கொண்டு வருவது, புதிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை தேசிய தலைமை வழிகாட்டுதலின்படி நடக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு, தனி சித்தாந்தம் இருக்கிறது. அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஒருவருக்கொருவரான பரஸ்பரம் இருப்பதுதான் கூட்டணி.
தற்போதைய சூழலில், தேசிய தலைமை எங்களுக்கு வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறது. மாநிலத் தலைமையும், தேசியத் தலைமையும் ஒருங்கிணைந்து முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார். எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தலைமை வலியுறுத்தும்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தேசியத் தலைமையிடம் நேரடியாகவே சொல்லி வருகின்றனர். தேசியத் தலைமையிடம் இருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும்வரை, நாங்கள் இது தொடர்பாக எந்த தகவலும் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி விஷயங்களை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். கட்சி உறுப்பினர்களில் இருந்து தொண்டர்கள் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தேசியத் தலைமையே வழி நடத்துவார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"தமிழக அரசு - ஆளுநர் மோதல் உயர்கல்வி வீழ்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும்" - ராமதாஸ் அறிக்கை!