கோவை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோவை மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,’’கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்-யை சந்தித்தோம்.
ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்தின் போதும் மக்கள் துன்பத்துக்கு ஆளானார்கள். பின்னர் கோவை சகஜ நிலை திரும்ப சில ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் அமைதியான கோவை மாநகரில் அமைதியை நிலைநாட்டுவது அனைவரின் கடமை. இனி இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறக் கூடாது. இதன் கவலைகளை ஆணையாளரிடம் பகிர்ந்து கொண்டோம். ஆணையாளர் எடுத்த முயற்சிகளை எங்களிடம் தெரிவித்தார்.
கடந்த குண்டுவெடிப்பின் போது ராதாகிருஷ்ணன் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு தற்போது பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒற்றை ஓநாய் தாக்குதல் என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன? அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜெகர்ஹான் என்ற நபருடன் இவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வருகிறது. அதே நேரத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற நிலையில் பின்னணி உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இஸ்லாமிய சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களாலும் இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது.
இவர்கள் யாரின் அரசியல் லாபத்திற்காக கையாட்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களது கருத்து. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பான முறையில் விசாரணை செய்ய வேண்டும். அதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க காவல்துறை உள்ளது, என்று காவல் ஆணையாளர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். பேட்டியில் அவர் 2019 க்கு முதற்கொண்டு இதுபோன்ற சீர்குலைவு நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது என்கிறார். இன்னொரு பேட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையின் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டது என்கிறார்.
இப்படி காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருந்தால் 2019 முதல் எப்படி சீர்குலைவு நடைபெற்று இருக்கும். இதற்கு மாநிலக் காவல்துறை பொறுப்பு அல்ல. காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மாலைக்குள் அனைத்து விஷயங்களையும் கொண்டு வந்தது நமது தமிழக காவல்துறை.
எனது கருத்துப்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரும். என்ஐஏ எப்படி செய்யப் போகின்றது என்பது ஒரு கேள்வி குறி தான்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"அடுத்த தேர்தலுக்கு பிறகு திமுக மட்டுமே நிலைத்து இருக்கும்" ...துரைமுருகன்