கோவை:திருப்பூர் மாவட்டம், அவினாசியைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி சுபஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி யோகா பயிற்சிக்காக கோவையில் உள்ள ஈஷா பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். ஒருவார காலம் பயிற்சிக்குப் பின், அவரை வீட்டிற்கு திரும்பி அழைத்துச் செல்ல அவரது கணவர் பழனிக்குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது மனைவி இங்கு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
தனது மனைவி இல்லையெனில், வேறு எங்கு சென்றார் என ஈஷா யோகா மையத்தினரைக் கேட்டபோது, வரவேற்பு அறையில் இருந்த சிசிடிவி கேமராவை பரிசோதனை செய்தபோது அவர் கால் டாக்ஸி ஒன்றில் ஏறிச் சென்றது தெரியவந்தது. பின்னர், இதுதொடர்பாக சுபஸ்ரீயின் கணவர் விசாரித்ததில், கார் ஓட்டுநர் அவரை இருட்டுப்பள்ளம் என்ற பகுதியில் இறக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பழனிக்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், கோவை ஈஷா மையத்தின் அருகே துலக்காங்காடு என்ற பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த உடல் காணாமல்போன சுபஸ்ரீயின் உடல் தான் என அவரது கணவர் உள்ளிட்டோர் உறுதி செய்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதனிடயே, அவர் ஈஷா யோகா மையத்தின் உடையுடன் யாரோ தன்னை துரத்தி வருவது போல, வேகமாக சாலையில் ஓடிய வீடியோ ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பல அரசியல் கட்சியினரும், பிற இயக்கங்களும் போராட்டங்களில் இறங்கின. அத்தோடு, இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு, இந்த வழக்கில் சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா மையத்தில் கலந்துகொண்டுள்ளார் என்றும் பின்னர், அவர் காணமல்போன நிலையில் அவரது கணவர் ஆலந்துறை காவல்நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடபெற்று வருவதாகவும், தொடர்ந்து அவர் சடலமாக துலக்கங்காடு பகுதியில் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.