கோயம்புத்தூர்: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர்கள் இன்று (மே.15) ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசி மையம் ஆகியவற்றை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்களிடம் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளோம். கடந்த நான்கு நாள்களாக இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து, அதனை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிக்கைகளாக உணவு வழங்கல் துறை அமைச்சர் அனுப்பி வருகிறார்.