கோயம்புத்தூர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு 47 ஆயிரத்து 200 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரத்து 200 செவிலியருக்குப் பயிற்சி அளித்துள்ளோம். முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட ஆறு லட்சம் பேரை கண்டறிந்து தடுப்பூசி போடப்படும்.
இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர்சாதன கிடங்குகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு மட்டுமே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.