தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோலார்பட்டி, சமத்தூர், சின்னாம்பாளையம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு, பொங்கல் பரிசு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு, 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் கறவை மாடுகளும், 1 லட்சத்து 50 ஆயிரம் நாட்டுக் கோழிகளும், 12 ஆயிரத்து 500 கறவை மாடுகளும் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிருக்கு இவை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மகளிர் அனைவரும் அவரவர் தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது" என்றார்.
பொங்கல் தொகுப்பு, பரிசு பொருள்கள் வழங்கும் அமைச்சர் உடுமலை இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ஊத்துக்குளி இளஞ்செழியன், டெம்போ முருகன், சுலீஸ்வரன்பட்டி நரி முருகன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:திருப்பூரில் அம்மா மினி கிளினிக்கள் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!