கோவை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று கோவை வந்தார். உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர் செல்லக்கூடிய வ.உ.சி மைதானம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொடிசியா மைதானம் உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமான கட்சித்தொண்டர்கள், கட்சிக்கொடிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனர்.
இதனையடுத்து முதல்நிகழ்வாக நேரு விளையாட்டு அரங்கம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயற்கை இழை ஓடுபாதை அமைப்பது மற்றும் 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மராமரத்துப் பணிகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.