கோயம்புத்தூர்:இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெறும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் 'சாரஸ் மேளா - 2023' என்னும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தேசிய அளவிலான விற்பனை கண்காட்சியை இன்று (மார்ச் 5) தொடங்கி வைத்தார்.
இந்த விற்பனை கண்காட்சி இன்று முதல் வருகிற 12ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் அனைத்து வகையான பொருட்களையும் சந்தைப்படுத்துதல் மற்றும் பாரம்பரிய கைவினை கலைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்த வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அலுவலகம் அனைத்தும் சேர்த்து மொத்தம் 80 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சி அரங்கத்தில் பிற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் கோவா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களும், தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி உள்ளனர். மேலும், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அரங்கம் அமைத்துள்ளனர்.
குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தக் கண்காட்சியில் பங்கேற்று, தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் இதனைத் திறந்து வைத்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''கோவையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த சாராஸ் கண்காட்சி, இன்று தொடங்கப்பட்டு வருகிற மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெறும். இங்கு 77 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.