கோயம்புத்தூர்:திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (டிச.2) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமி மற்றும் எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'கோவையில் தான் முதல் திராவிட இயக்க தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கருணாநிதி கால்படாத இடமே இல்லை. தமிழகத்தின் முதல் வேளாண்மை பல்கலைகழகம், டைடல் பார்க், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.
கோவையில் நடக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. சேலம் மாநாட்டு நிதியாக கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக ரூ.3.37 கோடி வழங்கியுள்ளனர். தமிழகத்திலேயே அதிக மாநாட்டு நிதியை கோவை மாவட்டம் வழங்கியுள்ளது. மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 'மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது, எதற்கு நடந்ததுனு யாருக்கும் தெரியாது. இயக்க வரலாறு, கொள்கை, தலைவர்கள் பற்றி பேசினார்களா? கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தினார்கள். ஆனால், திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும்.
கடந்த 3 வருடங்களில் தலைவர் கொண்டு வந்த முக்கியமான நான்கு திட்டம் முதலில் கட்டணமில்ல பேருந்து, பெண் கல்வி மேம்பட புதுமைப்பெண் திட்டம், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் 31 ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், 1.18 கோடி மகளிர் உரிமைத்திட்டம் இதனை மக்கள் மத்தியில் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்.