கோவை மாவட்டம், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை அறிமுக செய்யும் கூட்டம் அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது வேட்பாளர் மகேந்திரனை அறிமுகப்படுத்தி வைத்து விட்டு அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது, திமுக ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு, தொழிற்சாலைகள் அபகரிப்பு, சினிமாவை வாங்கி வெளியிடுவது போன்ற செயலில் மட்டும் தான் ஈடுபட்டு வந்தனர். மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசும் அமைச்சர் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, திமுக 17 வருடம் அங்கம் வகித்தது மட்டும்தான் சாதனை தவிர, தமிழகத்திற்கு அவர்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் இதையெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் ஏதேதோ செய்துவிட்டதாக தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கிறார். மேலும் உறுதியாக சொல்கிறேன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் அமைந்துள்ள அதிமுக கூட்டணிதான் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி எப்போதும் அதிமுக கோட்டையாகவே இருக்கிறது. இதில் திமுக ஒரு கல்லைக் கூட அசைக்க முடியாது. பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் எம்பியாக இருந்தபோது கோவை மாவட்டத்திற்கு 5000 கோடி அளவிலான நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருப்பதால் பொள்ளாச்சியில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.