கோயம்புத்தூர்:பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதன்பின் சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பழனியில் மேலே 6,000 பேர் மட்டுமே அமரும் வகையில் இடவசதி உள்ளது. மொத்தம் 52ஆயிரம் பேர் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். 33 அக்னி குண்டம் அமைக்கப்பட்டது, 13 மேல் மண்டபம் அனைத்து பிரகாரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பின்னர் 447 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழில் 108 ஓதுவார்கள் வைத்து வேத மந்திரம், திருமுறை, கந்த சஷ்டி கவசம் ஆகியவை இடம் பெற்று இருந்தது. தமிழில் குடமுழுக்கு நடத்த நீதி மன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது, அதன்படி குழு அமைக்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக ஆட்சியில் 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. 62 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சிலைகள் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு சிலைகள் ஒப்படைக்கப்படும். கோயிலுக்குச் சொந்தமான 3.54 லட்சம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பனி தொடங்கினோம்” என்றார்.